kumaran@throw.of.a.biased.dice:~$

Everything from binary constraints to boundless bhakti

நாம இராமாயணம் (தமிழ்)

“ஶுத்த பிரம்ம பராத்பர ராம” என்று போற்றப்படும் “நாம ராமாயணம்” என்பது, ஸ்ரீராமபிரானின் புனிதமான திருநாமங்கள் மற்றும் திருக்கல்யாண குணங்களைக் கூறும் ஒரு உன்னதமான படைப்பு ஆகும். சனாதன தர்மத்தின் இணையில்லா இரு இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் ஆன்மீக சாரமாய், ஸ்ரீராமபிரானின் வாழ்வு, காலவரிசைப்படியான முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கிய 108 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு பக்திப் பாமாலையாகும்.

இதனை இனிமையான மற்றும் எளிமையான தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன். மூல நாம இராமாயத்தில் ஒவ்வொரு வரியும் “ராம் (राम्)” என்று நிறைவு பெறும். தமிழில் இராமனை “ராம்” என்று கூறலாகாது ஆதலால் (ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம் தவிர்த்து), ஶ்ரீராமபிரானின் நாமத்தை ஒவ்வொரு வரியிலும் “வந்தாராம்”, “அருளினாராம்”, “துதித்தனராம்” என எழுத எத்தனித்துள்ளேன்.

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

பால காண்டம்

  1. உலகம் உய்ய உதித்தவராம்
  2. திலகமாய் இரகுகுலத்தில் வந்தவராம்
  3. அரவத்தின் மீது துயில் கொள்பவராம்
  4. பிரமனும் அமரரும் துதித்தனராம்
  5. இரவிகுலம் சிறக்கப் பிறந்தவராம்
  6. அரசர் தசரதர் தவபுத்திரராம்
  7. கோசலை மகவாய் வந்தவராம்
  8. கௌசிகர் மெச்சிடும் மாணவராம்
  9. கோர தாடகையை வதைத்தவராம்
  10. மாரிசாதனை வென்றவராம்
  11. கௌசிகர் யாகம் காத்தவராம்
  12. அகலிகை துயரம் துடைத்தவராம்
  13. கௌதம முனிவரும் பணிந்தாராம்
  14. தேவரும் முனிவரும் துதித்தனராம்
  15. நாவாய் வேட்டுவரும் நாடினராம்
  16. சனகரின் சிந்தை கவர்ந்தவராம்
  17. மனங்கவர் மைதிலியைக் கண்டவராம்
  18. அரனார் வில்லினை உடைத்தவராம்
  19. பிராட்டியாம் சீதையை மணந்தவராம்
  20. பரசுராமர் செருக்கை அழித்தவராம்
  21. திருமண கோலத்தில் நின்றவராம்
  22. பெருமைகொள் அயோத்தியை ஆண்டவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

அயோத்தியா காண்டம்

  1. பலநற் பண்புகள் கொண்டவராம்
  2. நிலமகள் நினைவினில் நின்றவராம்
  3. சந்திரஒளிர் முகம் கொண்டவராம்
  4. தந்தை சொல்லிட வனமேகினராம்
  5. வேட்டுவ குகனும் சரணடைந்தாராம்
  6. காட்டினில் அவரொடு ஐவரானவராம்
  7. சித்திரகூட வாசம் செய்தவராம்
  8. அத்திரி முனியை பணிந்தவராம்
  9. பெற்றவர் மனமெல்லாம் நிறைந்தவராம்
  10. சிற்றன்னை புதலவரும் வேண்டினராம்
  11. புதல்வராய் கடமையைச் செய்தவராம்
  12. பரதற்கு பாதுகை அளித்தவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

ஆரண்ய காண்டம்

  1. தண்டக வனத்தைக் காத்தவராம்
  2. வண்செய் அசுரரை வதைத்தவராம்
  3. தகவொடு இருமுனி வணங்கினராம்
  4. அகத்தியர் அருளைப் பெற்றவராம்
  5. சடாயு தொழுது நின்றனராம்
  6. அடவிப் பஞ்சவடி அமர்ந்தவராம்
  7. அரக்கியின் செருக்கை அழித்தவராம்
  8. கரதூஷனர்களை வென்றவராம்
  9. எழில்கொஞ்சும் மாந்தேடி ஏகினராம்
  10. அழிவில்லா அம்பு மாரீசற் கெய்தவராம்
  11. காட்டினில் சீதையை தேடினராம்
  12. வீட்டினை சடாயுவிற் கருளினராம்
  13. சபரியின் கனிகளைப் புசித்தவராம்
  14. கபந்தனின் கரங்களைத் துணிந்தவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

கிஷ்கிந்தைக் காண்டம்

  1. அனுமன் வந்து பணிந்தாராம்
  2. வானர சுக்ரீவனும் தொழுதாராம்
  3. பாதகன் வாலியை வதைத்தவராம்
  4. தூதாய் அனுமனைப் பணித்தவராம்
  5. மதவேள் இலக்குவனொடு நின்றவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

சுந்தர காண்டம்

  1. மாருதி மனத்தில் புரித்தவராம்
  2. தன்பக்தரின் துயரைத் துடைப்பவராம்
  3. ஜானகி ஜீவனைக் காத்தவராம்
  4. தசமுகன் செருக்கினைத் தீர்த்தவராம்
  5. அச்சமில் அனுமனுக் கருளியவராம்
  6. காகம் தீண்டியதை உரைத்தவராம்
  7. நிகரில் மணியைத் தந்தவராம்
  8. அனுமன் சொல்கேட்டு அகமகிழ்ந்தவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

யுத்த காண்டம்

  1. இலங்கை வேந்தனை வெல்ல ஏகினராம்
  2. சலத்தினை கணைகளால் சுருக்கினராம்
  3. பலங்கொள் வானரர்சூழ நின்றவராம்
  4. குலவீபிடணனுக் கபயம் அளித்தவராம்
  5. கற்கொண்டு பாலம் சமைத்தவராம்
  6. விற்கொண்டு கர்ணந்தலை துணிந்தவராம்
  7. அலகிலா அரக்கர் படையை அழித்தவராம்
  8. மயிலகி ராவணர்களைக் கொன்றவராம்
  9. தசமுக இராவணனை வதைத்தவராம்
  10. ஈசனும் பிரமனும் போற்றியவராம்
  11. மேதினி பாரம் குறைத்தவராம்
  12. மைதிலி கண்டுமனம் மகிழ்ந்தவராம்
  13. வீடணனுக்கு இலங்கை அளித்தவராம்
  14. விடைபெற்று அயோத்தி ஏகியவராம்
  15. பரத்துவாசர் பாதம் பணிந்தவராம்
  16. பரதற்கு பேருவகை தந்தவராம்
  17. இணையில் அயோத்தி ஆண்டவராம்
  18. அனைவரும் சமமென கொண்டவராம்
  19. இணையிலா அரியணை அமர்ந்தவராம்
  20. புனைமணி மகுடம் அணிந்தவராம்
  21. பரந்த நிலமன்னரும் போற்றினராம்
  22. அரங்கனை வீடணனுக்கு ஈந்தவராம்
  23. குரங்குகள் குலத்திற் கருளியவராம்
  24. அகிலம் அனைத்தும் ஆள்பவராம்
  25. சகல உயிர்களையும் காப்பவராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

உத்தர காண்டம்

  1. தவங்கொள் முனிவரும் போற்றினராம்
  2. புவனமெங்கும் புகழ் பெற்றவராம்
  3. இரமையில் இனிமையில் இரமித்தவராம்
  4. பிறழா நீதிநெறி நாட்டியவராம்
  5. மண்மகளை வனத்திற்கு உய்த்தவராம்
  6. விண்சென்ற சம்புகனும் துதித்தவராம்
  7. இலவணனை தனயன்கொண்டு அழித்தவராம்
  8. இலவகுசரால் உவகை கொண்டவராம்
  9. அலகிலா வேள்விகள் செய்தவராம்
  10. காலன் வரவறிந்து விண்ணேகியவராம்
  11. மண்ணுலகோருக்கு முத்தி தருபவராம்
  12. விண்ணவர் போற்றிட விளங்கியவராம்
  13. உயர்சோதி வடிவாய் உயர்ந்த்தவராம்
  14. அயர்வுறும் பிறவிப்பிணி அறுப்பவராம்
  15. தருமத்திற்கு உவமை ஆனவராம்
  16. கருணைக் கடலென முத்தி தருபவராம்
  17. அறியா உயிர்களையும் காப்பவராம்
  18. பிறவிப் பிணிகளைத் தீர்ப்பவராம்
  19. சத்திய லோகத்தில் வசிப்பவராம்
  20. நித்தியமாய் பக்தர்களுக்கு அருள்பவராம்
  21. ராம ராம ஜெய ராஜாராம்
  22. ராம ராம ஜெய சீதாராம்

ராம ராம ஜெய ராஜாராம்; ராம ராம ஜெய சீதாராம்

You can download a copy of this here